ஓராண்டில் ரூ.3.88 கோடி அபராதம் வசூல்



தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் கடந்த ஓராண்டில் ரூ.3.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகிவருவதாகவும், அவற்றில் 40 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கிவிடுவதாகவும் சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த கழிவுகள் தேங்குவதால் பூமி மழைநீரை உறிஞ்ச முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைகிறது. மேலும் நீர்நிலைகளுக்கு அடித்துச்செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களில் சூடான பொருட்களை போட்டு சாப்பிடுவதால் மனிதர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 14 வகையான மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு ₹100 முதல் ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டது.
கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 1,084 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ₹3.88 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பழையபடி வந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மீண்டும் ஓட்டல்கள், கடைகள், பூக்கடைகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு நுழைந்துவிட்டது. இல்லாமல் எந்த பகுதியிலும் பிளாஸ்டிக் இருக்கவே கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாளைய சந்ததி சுகாதாரத்துடன் வாழ முடியும். பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், தயாரிக்கும் இடங்களை கண்டறிந்து முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது’ என்றனர்.