


பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 8ம் தேதி, என்.ஐ.ஏ., இமெயில் முகவரிக்கு, பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் மெயில் ஒன்று வந்தது.
பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இமெயில் குறித்து விசாரிக்க ‘ரா’, உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்த மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்று பல்வேறு கால கட்டங்களில் அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
தற்போது வந்துள்ள மிரட்டல் இமெயில் முற்றிலும் போலி இமெயில் முகவரி என்று தெரிய வந்தாலும், உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.