இந்தியா

மீண்டும் கனமழை.. தத்தளிக்கிறது மும்பை

கொட்டித் தீர்க்கும் கனமழையால் மும்பை மாநகரம் மீண்டும் திண்டாடி திணறும் நிலை உருவாகி உள்ளது. மும்பையில் ரயில்,சாலை, விமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் பலத்த மழை பெய்த நிலையில் இப்போதும் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழையால் மும்பையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கோரேகோன், கண்டவாலி மற்றும் தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

பால்கர் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் தேங்கியதில் சாலைகள், வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. ராய்கட் அருகே போலாட்பூர் பகுதியில் மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, . போக்குவரத்துக்கு தடைபட்டது.

மலாட் பகுதியில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், வாகனங்கள் நீரில் மிதந்தபடி சென்றன. ஜோகேஷ்வரி பகுதியிலுள்ள மேற்கு விரைவு சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்குள்ள சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது.

மழையால் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், மும்பை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையால் மும்பையின் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தானே – பான்வெல் இடையிலான தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்த தால், அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதே போன்று குர்லா, சியான்,சூனாபாடி, ஆகிய ரயில் நிலையங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

குர்லா – சியான் இடையிலான ரயில் போக்குவரத்தும்,குர்லாவில் இருந்து மும்பை துறைமுகம் செல்லும் போக்குவரத்தும், சத்ரபதி சிவாஜி நிலையத்தில் இருந்து வாஷி செல்லும் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுமார் ஒரு லட்சம் பயணிகள் செல்ல வழியில்லாமல் தவிக்கும் நிலை உருவானது.

இதையடுத்து பயணிகள் தங்க தற்காலிக முகாம்களை ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. அங்கு பயணிகளுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சாலை மார்க்கத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி தொடர்பாளர் சுனில் உதேசி தெரிவித்தார்.

மும்பை கடற்கரையில் சுமார் 4.90 மீட்டர் அளவு உயரத்திற்கு அலைகள் சீறிப்பாய்ந்து வருவதால் கடற்கரை சாலை வழியே மக்கள் செல்ல வேண்டாம் என்ற மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில்தான் நகரத்தில் மிக கனமழை மும்பையை முற்றுகை இட்டு பெய்தது. கனமழையும், கடல்சீற்றமும் சேர்ந்து கொண்டதால் மும்பைவாசிகள் மீண்டும் திண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

READ  கம்பியால் அடித்து கொன்ற 12 வயது சிறுமி!

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக் கூடும் என்றும், கடல் சீற்றமும் நிலவும் என்றும், இதனால் கடற்கரை பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிக்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker