உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலையால் பாழாகும் விளை நிலங்கள்.



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உடும்பியம் கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரையில் அரவைப் பணியின்போது கரும்புகையுடன் சேர்ந்து சாம்பல் கரித்துகள்களும் வெளியேற்றப்படுவதாக புகார் கூறுகின்றனர்
தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து கரும் புகையுடன் வெளியேறும் சாம்பல் கரித்துகள்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆலைக் கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைவதோடு, விவசாய நிலங்களும் பாழடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீட்டின் வெளியே தொட்டிகளில் பாதுகாத்து வைக்கப்படும் தண்ணீர், உலர வைக்கும் துணிகள், உணவுப்பொருள்கள் மீது கரித்துகள்கள் படர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
இந்த கரித்துகள்கள் கண்களில் பட்டால் ஒரு வாரத்துக்கும் மேலாக எரிச்சலும், உடல்களில் அரிப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். புகையின் மூலம் வெளியேறும் கரித்துகள்களை வடிகட்டும் இயந்திரம் பொருத்தாததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டுகிறனர் அப்பகுதி மக்கள்…
ஆலையில் உருவாகும் ஸ்பெண்ட் வாஷ் எனும் கழிவுநீரை இரவு நேரங்களில் டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து சுற்று வட்டார விவசாய நிலப்பகுதிகளில் இலவசமாக ஊற்றிச் செல்வதால், பெரும்பாலான கிணறுகளில் நிலத்தடி நீரின் தன்மையே மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேநிலை நீடித்தால் உடும்பியம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக போதிய மழையின்றி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்றுத்தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ளவர்கள் மட்டுமே ஆங்காங்கே சாகுபடி செய்கின்றனர்.
கரும்புகையுடன் வெளியேறும் காற்றைச் சுவாசித்தால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இந்த ஆலையின் அலட்சியப் போக்கால் விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், இப்பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும், விவசாய நிலங்களையும், மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நச்சு கரித்துகளைக் கட்டுப்படுத்தவும், புதிதாக கருவிகளை பயன்படுத்தி நச்சு கரித்துகள் வெளியேற்றாமல் முறையாக பராமரிக்கவும் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்