அரசியல்இந்தியா

சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி ரத்து செய்தார்: காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிப்பு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது

இந்தியாவின் வட கோடியில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள எழில் மிகுந்த மாநிலம் காஷ்மீர். இந்த மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய 3 பகுதி களை கொண்டது.

நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது. ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 370, 35ஏ ஆகிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சொத்து வாங்கவோ, தொழில் தொடங்கவோ முடியாது. காஷ்மீர் மாநில பெண்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுடைய சொத்துரிமை பறிபோய்விடும். ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர மற்ற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அந்த மாநில சட்டசபையின் பதவி காலமும் 6 ஆண்டுகள் ஆகும். அந்த மாநிலத்துக்கென்று தனி அரசியல் சட்டமும், தனி கொடியும் உண்டு.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று பாரதீய ஜனதா வாக்குறுதி அளித்தது. தேர்தலில் அந்த கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை களை மத்திய அரசு தொடங்கியது.

கடந்த வாரம் இந்த நடவடிக்கை தீவிரம் அடைந்தது. முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். காஷ்மீர் சென்று இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் பக்தர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டது. கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளும் அங்கிருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாகவும் காஷ்மீர் மாநிலத்தை பிரிக்கவும், அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் மத்திய அரசு தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு பதற்றநிலை உருவானது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி காஷ்மீர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

நேற்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடியின் வீட்டில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மந்திரிசபையின் இந்த முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதுபற்றிய அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.
இந்த நிலையில், 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மாநிலங்களவை கூடியதும் அதன் தலைவர் வெங்கையா நாயுடு, தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தேசிய முக்கியத்துவத்தை கருதி சபை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமல் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி வழங்குவதாக கூறினார்.

உடனே எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) குலாம்நபி ஆசாத் எழுந்து, ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது போன்ற நிலை உள்ளதாகவும், 3 முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அதுபற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு அதை ஏற்க மறுத்து, மசோதாக்களை தாக்கல் செய்யுமாறு உள்துறை மந்திரி அமித்ஷாவை கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமித்ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் மசோதா, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களை தாக்கல் செய்ய எழுந்தார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.

அப்போது, மசோதாவின் பிரதிகளை உறுப்பினர்களுக்கு வழங்கிய பிறகே அவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பல உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பியவாறு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து அவற்றின் பிரதிகள் வழங்கப்பட்ட பிறகு மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்ய வெங்கையா நாயுடு அனுமதி வழங்கினார்.

அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாக்களை தாக்கல் செய்து பேசுகையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் என ஒரு யூனியன் பிரதேசம், லடாக் என மற்றொரு யூனியன் பிரதேசம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்று அப்போது அவர் கூறினார்.

அப்போது, பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கும், அந்த மாநிலத்தை பிரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். என்றாலும் அமித்ஷா தொடர்ந்து பேசினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலம் 1947-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி இந்தியாவுடன் இணைந்த போதிலும், 1949-ம் ஆண்டில்தான் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு புதிதாக கொண்டுவரப்பட்டது. இந்த பிரிவின் காரணமாக காஷ்மீர் மாநிலம் உண்மையிலேயே இந்தியாவுடன் இணையவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் இந்த பிரிவு கொண்டு வரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக 3 குடும்பங்கள்தான் காஷ்மீரை கொள்ளையடித்துக்கொண்டு இருந்தன.

தங்கள் நிலைப்பாட்டில் உறுதிப்பாடு இல்லாததாலும், வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு செயல்பட்டதாலும் கடந்த காலங்களில் இருந்த மத்திய அரசுகளால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், காஷ்மீர் மக்கள் இன்னும் தங்கள் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றுதான் கருதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கவும், தியாகம் செய்யவும் தவறுவது இல்லை என்றும் கூறினார்.

தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், 370-வது பிரிவை நீக்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், தேவை இல்லாதது என்றும் குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தை அரசு கொன்று விட்டதாகவும், நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை வந்திருப்பதாகவும் ஆவேசமாக கூறினார்.

இது அரசியல் சாசன படுகொலை என்று குற்றம்சாட்டிய ராஷ்டிரீய ஜனதாதள உறுப்பினர் மனோஜ்குமார் ஜா, காஷ்மீர் பாலஸ்தீனமாக மாறும் என்றும் எச்சரித்தார்.

அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், சிவசேனா உறுப்பினர் சஞ்சய் ராவத், நியமன உறுப்பினர் சுவபன் தாஸ்குப்தா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினார்கள்.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு இறுதியில் உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.

அதன்பிறகு நடைபெற்ற ஓட்டெடுப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் மசோதா மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நிறை வேறின.

மற்ற மாநிலங்களைப் போல், காஷ்மீர் மாநிலத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் அமித்ஷா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவும் நிறைவேறியது.
latest-news-jammu-kasmir-tamil-nalithal
இதேபோல் மக்களவையிலும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவையும், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் தாக்கல் செய்வதற்கான தீர்மானத்தை அமித்ஷா கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், இது தொடர்பான மசோதாக்களை செவ்வாய்க்கிழமை (இன்று) தாக்கல் செய்வதாகவும், அவற்றின் மீதான உறுப்பினர்கள் விவாதத்துக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அப்போது கூறினார். உடனே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

ஆனால் மந்திரியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தி.மு.க., புரட்சி சோசலிஸ்டு, தேசிய மாநாடு கட்சிகளின் உறுப்பினர்கள், காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மசோதாவை தாக்கல் செய்யும் முன் அது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்ததற்கும் அவர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close