சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சென்றது



சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சென்றது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை ஜூலை மாதம் 24, 25, 29, ஆகஸ்டு மாதம் 2, 6, 13, ஆகிய தேதிகளில் 6 முறை உயர்த்தப்பட்டது. இதில் கடந்த 13-ஆம் தேதி அன்று புவியின் சுற்றுவட்டபாதையில் இருந்து நிலாவை நோக்கி சந்திரயான்-2 வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.
நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. இப்போது நிலாவில் இருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டர் தூரத்திலும் சந்திரயான்-2 சுற்றி வருகிறது.
28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதன் பின்னர் மெல்ல, மெல்ல நிலாவை நெருங்கி செல்லும் வகையில் சந்திரயான்-2 ன் சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்படும். செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி அன்று சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் கலம் பிரியும், அந்த விண்கலம் நிலாவை நெருங்கும் வகையில் அதன் சுற்றுவட்டபாதை இருமுறை மாற்றி அமைக்கப்படும்.
விக்ரம் கலம் தரையிறங்கிய பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்.
நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி, அதிகாலை 1.55 மணி அளவில் சந்திரயான் 2 தரை இறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சந்திரயான்-2 அடுத்த ஒரு ஆண்டு காலம் நிலாவை சுற்றி வந்து ஆராயும்.