கல்வி

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவுக்கு ஏற்பாடு

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் பதிவு வழங்கி, அந்த விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஒருங்கிணைக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு பணிகளை செய்வதற்காக, கிராமப்புற வட்டார வள மையங்களில் ஆதார் பதிவுக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆதார் எண் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். புதிய ஆதார் எண்ணை உருவாக்கி பதிவு செய்த பின், அதற்கான ரசீதை மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

புதிய ஆதார் எண்ணை உருவாக்கி பதிவு செய்வதற்கும், ஏற்கெனவே ஆதார் எண் வைத்திருக்கும் மாணவர்களின் எண்களை பதிவதற்கும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் எண்ணில் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களில் மாணவர்கள் ஏதும் திருத்தம் கூறினால், 50 ரூபாய் கட்டணமாக வாங்கிக்கொண்டு திருத்தித்தரவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

5 வயது முடிவுற்ற மாணவர்களுக்கும், 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கும், ஆதார் எண்ணில், புகைப்படம், கைரேகை, கண் கருவிழி ஆகியவை புதிதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆதார் எண் பதிவை மேற்கொள்ள வசதியாக மாவட்ட அளவில் ஆதார் பதிவுக் கண்காணிப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிவுறுத்தல்படி செயல்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவை செயல்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close