நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்



நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 14ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன், பணி பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23 ம் தேதி மதியம் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை நடந்த இடத்தில் நீண்ட நேரம் காணப்பட்ட செல்போன் சிக்னலைக் கண்டறிந்த போலீசார், மதுரையில் திமுக பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கொலை நடந்த அன்று நெல்லையில் சுற்றிய ஸ்கார்பியோ கார் ஒன்று கொலை நடந்த சிறிது நேரத்தில் மதுரைக்கு சென்றதை கண்டறிந்த போலீசார் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்தனர்.
அரசியலில் சீனியரான தனது தாய் கட்சியில் முக்கிய இடத்திற்கு வராமல் போனதற்கு உமா மகேஸ்வரி தான் காரணம் என்ற ஆத்திரத்தில் இந்த கொலைகளை செய்ததாக கார்த்திகேயன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கார்த்திகேயனை கைது செய்துள்ள போலீசார், அவனை கொலை நிகழ்ந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து, கொலைத் திட்டத்தை அரங்கேற்றியது எப்படி என்பது தொடர்பாக கார்த்திகேயனை நடிக்க வைத்து போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, கொலை நடந்த அன்று காணாமல் போன 25 சவரன் நகைகளை, பாளையங்கோட்டை சாந்தி நகரிலுள்ள, சீனியம்மாளின் வீட்டிலிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, நள்ளிரவில் நெல்லை மாவட்ட 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நிஷாந்தினி இல்லத்தில் கார்த்திகேயனை போலீசார் ஆஜர்படுத்தினர். வருகிற 14ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கார்த்திகேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் டிஎஸ்பி அனில் குமார் மற்றும் அதிகாரிகள் கொலை நிகழ்ந்த வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.