மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..!



காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம், ஒருவாரத்தில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு காவிரியில் நீர் திறப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள முக்கிய அணையான கிருஷ்ண ராஜ சாகரின் நீர்மட்டம் 87.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4352 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 7927 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போன்று கபினி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 3490 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 12,927 கன வீதம் தண்ணீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.
கர்நாடக அரசு திறந்து விட்டுள்ள தண்ணீரை, அந்த மாநில விவசாயிகள் பாசன தேவைக்கு பயன்படுத்தி வரும் நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்தே உள்ளது. இதனால் ஓகேனக்கலில் வினாடிக்கு 9500 கன அடி வீதமே தண்ணீர் பாய்கிறது. அங்குள்ள சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து எட்டாவது நாளாக பரிசல் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு கடந்த 24 -ஆம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8900 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் நீர்மட்டம் 47 அடியை தொட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 23-ஆம் தேதி அன்று 39.13 அடியாக இருந்தது. இதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 24-ஆம் தேதி அன்று 40.5 அடியாக உயர்ந்த நீர்மட்டம் அன்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் உயரத் தொடங்கியது. கடந்த 7 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இதே போல நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தால், அடுத்த மூன்று நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.